இறந்த பின்பும் பாராளுமன்றத்தில் காந்தியை மிரட்டும் சாவர்க்கர்
1948 மே 15 அன்று ஒரு வழியாக அரசிதழ் வெளிவந்தது. காந்திஜி படுகொலை தொடர்பாக ஒன்பது பேர் மீது குற்றம் சுமத்தப்படிருந்தது. ஆத்ம சரண் ஐசிஎஸ் என்பவர் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்படிருந்தார். செங்கோட்டையில் வழக்கு நடைபெற்றது. அந்த ஒன்பது பேர் மீநாதுராம் கோட்சே. நாராயண ஆப்டே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாவா, சங்கர் கிஸ்தயா, கோபால் கோட்சே, டாக்டர் பார்ச்சுரே, சாவார்க்கர், திகம்பர் பட்கே ஆகியோர்.
இதில் கடைசியாக வருகிற திகம்பர் பட்கே அரசுக்கு ஆதரவாக அப்ரூவராக மாறினான். அவனது வாக்குமூலமே வழக்கின் முதுகெலும்பாக இருந்தது. அவன் ஆரம்பம் முதல் கடைசிவரை இவர்களோடு இருந்தவன். அவனது வாக்குமூலத்தைக் கேளுங்கள்:
‘1948 ஜனவரி 14 அன்று ஆப்டே, கோட்சேயோடு நானும் பம்பாயில் உள்ள சாவார்க்கர் சதன் போயிருந்தேன். என்னைக் காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி விட்டு ஒரு பையோடு அவர்கள் இருவர் மட்டும் உள்ளே போனார்கள். ஐந்து அல்லது பத்து நிமிடம் கழித்து அதே பையோடு திரும்பி வந்தார்கள். ஜனவரி 15 அன்று பம்பாயில் தீட்சித்ஜி மகாராஜாவின் காம்பவுண்டில் ஆப்டே என்னைப் பார்த்து தில்லிக்கு தன்னோடு வருகிறாயா என்று கேட்டான். காந்தி, நேரு, சக்கரவர்த்தி ஆகியோர் தீர்த்துக்கட்டப்பட வேண்டுமென்று சாவார்க்கர் முடிவு செய்து விட்டார். அந்த வேலையை எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என்றான். கடைசியாக ஒருமுறை சாவார்க்கரை தரிசனம் செய்து கொள்வோம் என்று நாதுராம் கோட்சே கூறியபடி அவனும் ஆப்டே, பட்கே ஆகியோரும் ஜனவரி 17 அன்று சாவர்க்கரைப் பார்க்கச் சென்றார்கள்.]
அந்த வீட்டின் கீழ்ப் பகுதியில் உள்ள அறையில் நான் உட்கார்ந்திருந்தேன். கோட்சேயும் ஆப்டேயும் மேலேயிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது ‘வெற்றியோடு வாருங்கள்' என்று சாவார்க்கர் அவர்களிடம் கூறியதைக் கேட்டேன். திரும்பி வரும்போது காந்திஜியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும், இவர்களுடைய வேலை நிச்சயம் வெற்றிகரமாக நிறைவேறும் என்றும் சாவர்க்கர் கூறியதாக ஆப்டே என்னிடம் கூறினான். சாவர்க்கரின் உத்தரவு என்று ஆப்டே கூறியதால் அவனோடும் கோட்சேயோடும் நான் டில்லி சென்றேன்.
உலகப் புகழ் பெற்ற தலைவர் ஒருவரைக் கொலை செய்வதென்றால் நிதி பலமும், ஆள் பலமும், ஸ்தாபன பலமும் இல்லாமல் முடியாது. ஒரு தபால்காரரின் மகனாகிய நாதுராம் கோட்சேக்கு பம்பாய்க்கும் தில்லிக்கும் பறந்து செல்ல பணம் வேண்டியிருந்தது. துப்பாக்கி வாங்குவதற்காகவும் இதர ஏற்பாடுகளுக்கும் பணம் வேண்டியிருந்தது. பத்திரிகை நடத்தவே பணம் கொடுத்தவர் சாவர்க்கர். அப்படியிருக்க கோட்சே ஒருவனால் மட்டுமே இந்தக் காரியத்தை செய்திருக்க முடியாது. ஆனால், நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தில் அடித்துச் சொன்னது என்னவென்றால் சகலமும் தான் ஒருவன் மட்டுமே திட்டமிட்டுச் செய்து முடித்தது என்பதாகும். கொலைகாரர்கள் பொய்யர்களாவும் இருப்பது இயல்பேயாகும்.
இதை அவனின் தம்பி கோபால் கோட்சேயே ஒப்புக் கொண்டிருக்கிறார். கோன்ராட் எல்ஸ்ட் என்பவர் ‘காந்தியும் கோட்சேயும் '' என்கிற நூலை எழுதியிருக்கிறார். 2001ம் ஆண்டில்தான் அது வெளிவந்திருக்கிறது. அவருக்கு கோபால் கோட்சேயும் மதன்லால் பாவாவும் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். சதித்திட்டம் இருந்தது என்பதை இருவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். கோபால் கூறியிருக்கிறார்.
‘ஆமாம். அதில் நானும் ஈடுப்பட்டிருந்தேன். ஆனால் அதை மறுக்கிற உரிமை எனக்கிருந்தது. நாதுராம் தூக்கில் தொங்கப் போவது நிச்சயம். மற்றவர்களுக்கு அதிலிருந்து தப்பிக்க வாய்ப்பிருந்தது. எனவே நாதுராம் உள்ளிட்ட நாங்கள் அனைவருமே சதித் திட்டம் என்பதை மறுத்து வாதாடினோம்'' நாதுராம் கோட்சே நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தை 1948 நவம்பர் 8 அன்று சமர்ப்பித்தான். 150 பத்திகள் கொண்ட அந்த 92 பக்க வாக்குமூலம் இந்துத்வாவாதிகளின் அரசியல் ஆவணம் எனலாம். இந்து மதவெறியும், மகாத்மா மீது கொண்ட வெறுப்பும் ததும்பி வழிந்தது. இத்தகையதொரு அரசியல் சித்தாந்த அறிக்கையை தயாரிக்கும் அளவுக்கு ஆற்றல் கொண்டவன் அல்ல நாதுராம். இதைத் தயாரித்து தந்தது சாவர்க்கரே என்று ஒரு கருத்து வலுவாக உள்ளது.
இந்த அறிக்கை நீதிமன்றத்தில் வாசித்து முடிக்கப்பட்டதும் அது வெளியிடுவது தடை செய்யப்பட்டது. எனினும் 1960களில் இந்திய மொழிகளில் அதனது மொழியாக்கம் வெளிவரத் துவங்கியது.
1977ல் கோபால் கோட்சே மூல ஆங்கிலப் பிரதியை ‘தங்களை இது மகிழ்விக்கலாம் நீதிபதி அவர்களே'' (may it please your honour?) என்கிற எச்சரிக்கை மிகுந்த தலைப்பில் ஏன் மகாத்மா காந்தியைக் கொலை செய்தேன்?'' (Why I assassinated Mahatma Gandhi?) என்கிற தலைப்பிலேயே வெளியிட்டார். இடையில் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்கள் இந்த தைரியத்துக்கு காரணமாக இருக்கலாம். நாதுராம் கோட்சே பேசுகிறான்
‘நாக்பூரைச் சார்ந்த மறைந்த டாக்டர் ஹெட்கேவோர் மராத்தி பேசும் பகுதிகளிலும் 1932 வாக்கில் ஆர்.எஸ்.எஸ்.சை ஆரம்பித்தார். அவரது பேச்சாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது. அந்தச் சங்கத்தில் ஒரு தொண்டனாகச் சேர்ந்தேன். ஆரம்ப கட்டத்திலேயே சங்கத்தில் சேர்ந்த தொண்டர்களில் நானும் ஒருவன். அதனுடைய அறிவுசார் துறையில் சில ஆண்டுகள் பணியாற்றினேன். இந்துக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு வந்தபோது அவர்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்க அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியம் என்று பட்டது. எனவே சங்கத்தை விடுத்து, இந்து மகாசபையில் சேர்ந்தேன்''
காந்திஜி கொலையில் தனக்கு சம்பந்தமில்லை என்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமை. கொலைகாரன் நாதுராமோ, தான் அந்த அமைப்பில் இருந்ததைப் பெருமையோடு கூறியிருக்கிறான். அரசியல் நடவடிக்கைகளில் இறங்குவதற்காகவே அதிலிருந்து விலகி இந்து மகாசபையில் சேர்ந்ததாகச் சொல்லியிருக்கிறான். மற்றபடி சித்தாந்த வேறுபாட்டின் காரணமாக அல்ல.
கோபால் கோட்சேயோ ஆர்.எஸ்.எஸ்.லிருந்து தனது தமையன் விலகியதேயில்லை என்கிறார். நாதுராமுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என்பதாக பி.ஜே.பி. தலைவர் எல்.கே. அத்வானி பேசியபோது அதை மறுத்து ‘பிராண்ட் லைன்' ஏட்டிற்கு (28.1.94) பேட்டி கொடுத்தார் கோபால். உள்ளூர் மட்டத்தில் நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.சின் ஓர் அறிவுஜீவி அலுவலகராகவும், தொண்டராகவும் இருந்தார். மூத்தவர் நாதுராமின் தூண்டுதலால் நான்கு கோட்சே சகோதரர்களும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களாகவே வளர்ந்தார்கள். அவர்களது செயல்பாட்டு மையம் சற்று மாறிய போதிலும், ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து அவர்கள் விலகியதில்லை. இதுவே கோபால் பேட்டியின் சாரம். நாதுராமின் நீதிமன்ற அறிக்கை பற்றிக் கேட்கப்பட்டபோது கோபால் கூறினார் ‘காந்தி கொலைக்குப் பிறகு கோல்வாக்கரும் ஆர்.எஸ்.எஸ்.சும் பெரும் சிரமத்திலிருந்த காரணத்தால் அப்படிக் கூறியிருந்தார். ஆனால், ஆர்.எஸ்.எஸ்சை விட்டு அவர் விலகவில்லை.''
இந்த அளவுக்கு உண்மையை ஒப்புக் கொண்டவரை கோபால் நாணயஸ்தரே. நாதுராம் தொடர்ந்து பேசுகிறான்.
‘இந்து மகாசபையின் தலைவராக இந்தக் காலத்தில் வீர் சாவார்க்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது காந்தயமான தலைமையாலும், சூறாவளிப் பிரச்சாரத்தாலும் இந்து இயக்கம் மிகுந்த உத்வேகப்பட்டது. செழுமைப்பட்டது. இந்து லட்சியத்தில் மிகுந்த நம்பிக்கையுள்ளவர். திறமைமிகு தலைவர் என்ற முறையில் லட்சக்கணக்கான இந்து இயக்க வாதிகள் அவரைத் தங்களின் நாயகராகப் பார்த்தார்கள். அவர்களில் நானும் ஒருவன். மகாசபையின் நடவடிக்கைகளில் பக்தி பூர்வமாக ஈடுபட்டேன். எனவே, சாவர்க்கர்ஜியோடு தனிப்பட்ட முறையில் தொடர்பு ஏற்பட்டது.''
இப்படிக் கூறிய நாதுராம், தானும் ஆப்டேயும் பத்திரிகை துவங்கியபோது சாவார்க்கர் நிதி கொடுத்து உதவியதையெல்லாம் வெளிப்படையாக ஒப்புக் கொண்டான். சொந்த நிதி பலம் இல்லாத நாதுராம் காந்திஜியைக் கொலை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய மட்டும் எப்படிப் பணம் புரட்டினான் எனும் கேள்வி இயல்பாகவே எழுந்து விடுகிறது. இது ஒருபுறமிருக்க, சாவர்க்கர் மீது பக்திமயமான ஈடுபாட்டோடு இருந்திருக்கிறான். நாதுராம் என்பது நிச்சயமாகிறது. சித்தாந்த ரீதியிலும் தனிப்பட்ட முறையிலும் தனது தானைத்தலைவராக சாவர்க்கரை கொண்டிருந்திருக்கிறான் நாதுராம்.
மேற்கண்ட பகுதிகள் ‘கோட்சேயின் குருமார்கள்' என்ற அ.அருணன் எழுதியுள்ள நூலில் இடம் பெற்றவை. இந்த நூலினை வசந்தம் வெளியீட்டகம், 69/24, ஏ, அனுமார் கோவில் படித்துறை, சிம்மக்கல், மதுரை625 001. விலை ரூ.25.
நன்றி- http://www.keetru.com/vizhippunarvu/jun07/history.php
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment