நன்றி - சையது அலி, துபாய்.(Today Tippu sultan is very less remembered. Hence pls pass this article to as many people as you can. Any more data to this article is also appreciated.-by Blogspot owner)
1799 ஆம் மே மாதம் 4ஆம் தேதி சாதாரண சிப்பாய்போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர்தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத்திருமகனின் வரலாற்றை மே 4ஆம் தேதியாகிய இன்று நினைவு கூறுவது மிகவும் பொருத்தமாகும்
"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்'- இது தான் திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்தவேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹேரிஸ் இவ்வாறு கூறினான்: ’’இன்று முதல் இந்தியா நம்முடையது’’ என்று. இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்புசுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக்குறிப்பிடுகிறார்.( The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).
1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி - ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத்தளபதியாக மாறினார்.
1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767 - 1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றியும் பெற்றார்.
திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் வெற்றியே பெற்றார் திப்பு.
1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத்தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்தவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பிரெஞ்சுப்படையினரையும் சேர்த்துக்கொண்டு ஆவேசத்துடன் போரைத்தொடர்ந்தார் திப்பு. ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்துக்கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்தவேண்டியதாயிற்று.1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க்கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச்செய்தது.
கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டிவிடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு . எனவே அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான். இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணந்துக்கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார். ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்டபோதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக்குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில்,’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக்கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக்கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’.என்று குறிப்பிட்டான். போரின் துவக்கத்தில் வெற்றிப்பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக்கொண்டதால் ஒப்பந்தம் செய்துக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. அதன் பின்னரும் பதிலடிக்கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.
திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்குவழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்குவாங்கினர். இதனைக்குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத்தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான்,’இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்” என்று.
ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குறிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்தபொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாதபோதிலும்
கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு. எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக்கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். ""அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்'' என்று பதறுகிறான் அவருடைய பணியாள். ""முட்டாள்... வாயை மூடு'' என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! ""ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்'' என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது. எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக்கொடுத்தனர்.
திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப்பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணர்ந்தார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத்தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னாடியாக திகழ்ந்தார் அவர். முதன் முதலில் போர்களத்தில் ஏவுகனையை பயன்படுத்தியது திப்பு சுல்தான் தான். அவர் வீசிய ஏவுகனை ஆங்கிலேயனை புறமுதுகிட்டு ஓடச்செய்தது. டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ’நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார். இதனை இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோஸ் ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை,’இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக்கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.
வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்தநிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக்கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேறவேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத்திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச்செய்துவந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.
நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மதுவிற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்:”மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?’ என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச்சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார். அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு ’எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதியினரால் கீழ் ஜாதி பெண்கள் மீது பாலியல் ஆதிக்கம் செய்து வந்ததை முடிவுக்கு கொண்டுவந்தார். சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில்கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.
திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக்கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம். திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத்தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக்கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது. இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ’திப்புவின் சமயக்கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். நஞ்சங்கோட்டில் உள்ள ஸ்ரீகண்டிஸ்வரா கோயிலில் இன்றும் திப்பு அளித்த கலசம் மற்றும் வைர கற்கள், நஞ்சங்கோட்டில் நஞ்சுந்டிஸ்வரா கோவிலுக்கு கொடுக்க்பட்ட பச்சை லிங்கம், ஸ்ரீரங்கப்பட்டினத்தில் ரங்கநாதர் கோவிலுக்கு கொடுக்கப்பட்ட வெள்ளி கோப்பைகள் மற்றும் விளக்குகள், ஸ்ருங்கேரி சங்கராச்சாரியா மடத்திற்கு செய்த பொருள் உதவிகள், மெல்கோட்டே கோயிலில் உள்ள கலசங்கள், கலாலேயில் லகஷ்மிகாண்டே கோயில் வெள்ளி கோப்பைகள் திப்புவின் மதநல்லினக்க கொள்கைக்கு சான்றாக விளங்குகிறது.
திப்புவின் விவசாயக்கொள்கை
""எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்'' என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப்பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார். 1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத்துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல்நாட்டப்பட்ட கல்லைக்கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.
திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்'' என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
போர்களத்தில் நேர்மை
""தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்'' என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு.
இத்தகைய மாவீரனது பெயர் வரலாற்றில் எங்கோ ஒரு மூலையிலே கிடக்கிறது. அதனை நாம் உலகத்திற்கு உரக்க சொல்வோம்
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2010
(39)
-
▼
May
(11)
- ஊனமுற்ற முஸ்லிம் இளைஞரை போலி என்கவுண்டரில் சுட்டுக...
- உடனடியாக தூக்கிலிடுங்கள் என்று அஃப்சல் குரு கோரவில்லை
- புனே குண்டுவெடிப்பு:மத்திய அரசிடம் தவறான தகவலை அளி...
- கோவா குண்டு வெடிப்பு - ஹிந்துத் தீவிரவாதிகள் கைது
- பணத்திற்காக மதக்கலவரம் நடத்த தயார் என்று ஸ்ரீராம் ...
- நம் இந்தியத் திருநாட்டை காட்டிக் கொடுத்த துரோகிகள்
- ஷொஹ்ராப்தீன் வழக்கு: சாட்சியைக் கொன்றது கைகளை பின்...
- மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப்போரின் உயிர...
- பெரு நகரங்களில் முஸ்லிம்களுக்கு வாடகை வீடு கொடுப்ப...
- மீண்டும் ஒரு போலி என்கவுண்டர் - அப்பாவி முஸ்லிமை ச...
- ஹெட்லி அமெரிக்க உளவாளிதான்: ஹெட்லியின் தாய்மாமன் ப...
-
▼
May
(11)
No comments:
Post a Comment