Sunday, May 9, 2010

ஷொஹ்ராப்தீன் வழக்கு: சாட்சியைக் கொன்றது கைகளை பின்னால் கட்டிய நிலையில்- சி.ஐ.டியின் அதிர்ச்சி அறிக்கை

நன்றி் - http://paalaivanathoothu.blogspot.com/2010/05/blog-post_9263.html

அஹ்மதாபாத்:ஷொஹ்ராப்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் நேரில் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியை சரியாக திட்டம் தீட்டி கைகளை பின்னால் கட்டிய நிலையில் கொலைச் செய்ததாக குஜராத் சி.ஐ.டி அதிர்ச்சிகரமான உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளது.

சி.ஐ.டியின் க்ரைம் பிரிவு நேற்று முன்தினம் கைதுச்செய்த போலீஸ் கான்ஸ்டபிள்களான கரண் சிசோதியா, கிரண் சவுகான், காஞ்சி குச்சி ஆகியோரை விசாரணைச் செய்ததில் நரேந்திர மோடி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் இந்த உண்மை வெளிப்பட்டது.

குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பனஸ்கந்தா மாவட்டத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பிரஜாபதியைக் கொன்றது போலி என்கவுண்டர் மூலம் என்று கைதுச் செய்யப்பட்ட கான்ஸ்டபிள்கள் விசாரணை அதிகாரியான ஆர்.கே.பட்டேலிடம் தெரிவித்தனர்.

இவ்வழக்கில் ஏற்கனவே கைதுச்செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளான வன்சாரா மற்றும் விபுல் அகர்வாலுக்கெதிரான மேலும் ஆதாரங்களாக அமைந்துள்ளன போலீஸ் கான்ஸ்டபிள்களின் வாக்குமூலங்கள்.

போலி என்கவுண்டர் நடக்கும் வேளையில் அகர்வால் பனஸ்கந்தா மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினார். எல்லை ரேஞ்ச் டி.ஐ.ஜியாக பணிபுரிந்திருந்த வன்சாரா அகர்வாலின் மேலதிகாரியாக இருந்தார்.

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷிஷ் பாண்டியா தங்களை ஒரு பட்ரோலிங் வாகனத்தில் பனஸ்கந்தாவில் சாப்ரி செக்போஸ்டில் கொண்டுவிட்டதாக கான்ஸ்டபிள்கள் தெரிவிக்கின்றனர். ராஜஸ்தானிலிருந்து 4 போலீஸ்காரர்களும் வந்திருந்தனர். ஒரு வெள்ளை நிற மாருதி 800 வருவதைக் கவனிக்கவேண்டும் என பாண்டியா ஹெட் கான்ஸ்டபிள்களிடம் தெரிவித்துள்ளார்.

சிறிது நேரம் கழிந்தபொழுது ஒரு நம்பர் பிளேட் இல்லாத மாருதிகார் அங்கு வந்தடைந்தது. அதிலிருந்து இறக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவரின் கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. அவர்தான் துளசிராம் பிரஜாபதியாவார். பின்னர் பிரஜாபதியை போலீஸ் ஜீப்பிற்கு அருகில் கொண்டு வந்தனர். பாண்டியா தனது கையிலிருந்த நாட்டுத் துப்பாக்கி மூலம் மாருதி காரை நோக்கி ஒரு முறை சுட்டார். பின்னர் தனது பணிக்கு பயன்படுத்தும் ரிவால்வரை எடுத்து பிரஜாபதியை நெருங்கி நின்றவாறு சுட்டார்.

தொடர்ந்து ராஜஸ்தான் போலீஸ்காரர்கள் இருவர் பிரஜாபதியை சுட்டனர்.பிரஜாபதி இறந்துவிட்டார் என உறுதிச் செய்த பின்னர் நாட்டுத் துப்பாக்கியில் குண்டுகளை நிரப்பி தனது கையில் சுட்டுக் கொண்டனர். காரணம் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டது என்பதை காண்பிப்பதற்காக.

பின்னர் போலீஸ் பத்திரிகைகளுக்கு வழங்கிய கதை இதுவாகயிருந்தது: 'ராஜஸ்தான் போலீஸ் ஒரு வழக்குத் தொடர்பாக பிரஜாபதியை அஹ்மதாபாத்திற்கு கொண்டு வந்தனர். திரும்பிச்செல்லும் வழியில் பிரஜாபதியின் ஆட்கள் போலீஸ் மீது தாக்குதல் நடத்தி அவரை விடுவித்தனர். பின் தொடர்ந்து சென்ற குஜராத் போலீஸ் சத்திரபதி என்ற இடத்தில் வைத்து பிரஜாபதியை என்கவுண்டர் மோதலில் சுட்டுக் கொன்றனர்.' என்று.

இதற்கிடையே ஷொஹ்ராப்தீன் கொலையுடன் தொடர்புடைய சிறையிலடைக்கப்பட்டிருக்கும் துணை போலீஸ் சூப்பிரண்ட் என்.கெ.அமின், இன்ஸ்பெக்டர் வி.ராத்தோர் ஆகியோரை தங்கள் கஸ்டடியில் தருவதற்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.

இம்மனுவில் வருகிற 12 ஆம் தேதி முடிவு கூறப்படும். மேலும் சி.பி.ஐயின் புலனாய்வுக்குழு ஷொஹ்ராப்தீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கவ்ஸர்பீ ஆகியோரை ஒரு பஸ்ஸிலிருந்து கடத்திச் சென்ற விபரங்களை சேகரிக்க ஆந்திரபிரதேசம் சென்றுள்ளது.

ஷொஹ்ராப்தீன் ஷேக் கொலையில் குஜராத் போலீசுடன் ஆந்திராவில் சில போலீஸ்காரர்களுக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகம் உள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments:

Post a Comment

Blog Archive