Sunday, May 2, 2010

மீண்டும் ஒரு போலி என்கவுண்டர் - அப்பாவி முஸ்லிமை சுட்டுக்கொன்ற அஸ்ஸாம் ரைஃபிள்ஸின் பொய் அம்பலம்

http://www.twocircles.net/2010may01/manipur_muslim_picked_killed_fake_encounter_assam_rifles.html இம்பால்:கடந்த ஜனவரி மாதம் மணிப்பூரைச் சார்ந்த அப்பாவியான ஃபஸீருத்தீன்(வயது 45) என்பவரை வீட்டிலிருந்து கடத்திச் சென்று பின்னர் கொடூரமாக சுட்டுக்கொன்று, தீவிரவாதி என பட்டம் சூட்டிய அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் ஜவான்களின் பொய் அம்பலமாகியுள்ளது. மணிப்பூரில் கடந்த சில வருடங்களாக அப்பாவிகளை சுட்டுக் கொன்றுவிட்டு என்கவுண்டர் என்று பொய் நாடகமாடும் அரசுப் படையினரின் வெறித்தனமான போக்கு தொடர்ந்து வருகிறது. ஃபஸீருத்தீன் அந்த அப்பாவிகளில் ஒருவராவார். கடந்த ஆண்டும் சாதரண நபர் ஒருவரை அரசு பாதுகாப்பு படை அநியாயமாக சுட்டு வீழ்த்தியதை டெஹல்கா புலனாய்வு இதழ் அம்பலப்படுத்தியது. 45 வயதான ஃபஸீருத்தீன் மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்பாலிலுள்ள செக்கான் நகரில் உபயோகப்படுத்தப்பட்ட துணிகளை விற்கும் கடையை நடத்தி வந்தார். இவருக்கு மெம்சா என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டில் தூங்கப் போனார். அப்பொழுது சிலர் வீட்டுக் கதவை வேகமாக தட்டும் சப்தம் கேட்டது. ஃபஸீருத்தீன் கதவை திறக்க செல்லும் முன்பே மாறுவேடத்தில் வந்திருந்த பாதுகாப்பு படையினர் கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தனர். பின்னர் அவர்கள் ஃபஸீருத்தீன் மற்றும் அவருடைய மனைவியின் கண்களை துணியால் கட்டினர். ஃபஸீருத்தீனின் மனைவி மெம்சாவின் வாயில் துணியை அமுக்கி கத்தாமலிருக்க செய்தனர். வீட்டின் அலமாரியை உடைத்து ஃபஸீருத்தீன் சேமித்து வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாயையும், 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நகைகள் மற்றும் ஒரு மொபைல் ஃபோனையும் அபகரித்துவிட்டு ஃபஸீருத்தீனை வெளியே இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர்தான் பாதுகாப்பு படையினரின் நாடகம் ஆரம்பித்தது. இரவு 11 மணியளவில் மீண்டும் திரும்பிவந்த பாதுகாப்பு படையினர் ஃபஸீருத்தீன் வீட்டின் சுவரை இடித்துத் தள்ளியுள்ளனர். ஃபஸீருத்தீனின் மனைவி பயந்து போய் தனது 4 குழந்தைகளுடன் உறவினரின் வீட்டிற்கு பாதுகாப்பிற்காக தஞ்சம் புகுந்துள்ளார். அப்பொழுது தனது வீட்டினுள் பல முறை துப்பாக்கியால் சுடும் சப்தத்தை கேட்டுள்ளார். மறுநாள் காலையில் மெம்சா தனது வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது தனது வீட்டு முற்றத்தில் இரத்தக்கறை படிந்துக் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டுள்ளார். சற்று தைரியத்தை வரவழைத்தவாறு மெம்சா அஸ்ஸாம் ரைஃபிள்ஸின் க்வாக்டா முகாமிற்கு சென்று தனது கணவரைப் பற்றி விசாரித்துள்ளார். ஆனால் அங்கிருந்த அதிகாரிகள் ஃபஸீருத்தீனை கைதுச் செய்யவில்லை என்று மறுத்துள்ளனர். ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை புரிந்துக் கொண்ட மெம்சா கிராமத் தலைவரான பிஸாக்கை அணுகியுள்ளார். அப்பொழுது உள்ளூர் போலீஸ் ஸ்டேசனிலிருந்து ஒரு போன்கால் வருகிறது. அதில் ஃபஸீருத்தீன் க்வாக்டா குமான் பகுதியில் வைத்து அஸ்ஸாம் 33 ரைஃபிள்ஸால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், அவரிடமிருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வருகிறது. பின்னர் ஃபஸீருத்தீனின் உடல் அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய உடலில் 15 துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த காயங்கள் இருந்தன. மேலும் அவர் ஏற்கனவே அணிந்திருந்த ஆடையல்லாத போராட்டத்தின் போது அணியக்கூடிய ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருடைய சொந்த ஆடையில் எந்தவித துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த அடையாளமும் இல்லை. இதிலிருந்தே ஃபஸீருத்தீன் வேறொரு ஆடை அதாவது போராளிகளுக்கான ஆடை அணிவிக்கப்பட்டு பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்பது தெளிவாக விளங்கியது. ஆனால் மணிப்பூர் முதல்வர் ஒக்ராம் இபோபியோ ஃபஸீருத்தீனின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் அளிப்பதாக வாக்குறுதியளித்து விட்டு கப்சிப்பாகி விட்டார். ஆனால் இந்த அநியாயமான கொடூர போலி என்கவுண்டர் கொலையைக் குறித்து விசாரணைக்கு அவர் உத்தரவிடவில்லை.

No comments:

Post a Comment

Blog Archive